சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 20 மாநிலப் பல்கலைக் கழங்களுக்கு வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். பல்கலைக் கழங்களுக்கு இணை வேந்தர்களாக அந்தத்துறையின் அமைச்சர்களும், துணை வேந்தர்கள் தேடுதல் குழுவின் மூலம் கண்டறியப்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணாப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகிய 6 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது. இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமனம் குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேச வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க:பத்திரிகையாளர்களுக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தியது தமிழக அரசு..!
முன்னதாக ஆளுநர் ரவி 2023 செப்டம்பர் 6-ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவினை அமைத்து அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும், அதன் அதிகாரப்பூர்வ அரசிதழில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முன்னதாக அறிவிக்கப்பட்ட தனது அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என ஆளுநர் அறிவித்தார். அதேப்போல், தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெறும் என நம்புவதாகவும், துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவினை அமைக்கவும், அந்தக் குழு துணைவேந்தர் பதவிக்கான நியமனத்திற்கு ஆளுநர் மூன்று நபர்கள் பட்டியலை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமாக ரவி, சிதம்பரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடல் குழுவை அமைத்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் விதிகளின் படியும், பல்கலைக் கழக மானியக்குழுவின் திருத்தப்பட்ட விதிகள், 2018 இன் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படியும், தேடல் குழுவில், வேந்தர், தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் பல்கலைக் கழக மானியக்குழுவின் தலைவர் ஆகியோர் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநர்-வேந்தரும், நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கிய, 25 அக்டோபர் 2024 தேதியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தேடல் குழுவின் வேந்தரின் நியமனக் குழுவின் கன்வீனராக கொண்ட கடிதத்தை அறிவிக்குமாறு'' தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.