தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல்.... இடைத்தரகர்களுக்கு அரசு எச்சரிக்கை! - PONGAL PACKAGES

பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்வதற்காக அரசின் சார்பில் இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கல் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல்
பொங்கல் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 6:32 PM IST

சென்னை:பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்வதற்காக அரசின் சார்பில் இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக இணையதளம் வழியிலோ அல்லது அந்தந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் மூலம் மட்டுமே கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

முன்னேற்பாடுகள் தீவிரம்:இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழநாடு முதலமைச்சர் 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இன்று (03.01.2025) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

கொள்முதல் குழுக்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் (சென்னை தவிர) மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களை தலைவராக கொண்டும் உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் அவர்களை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சித்தலைவரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னை தவிர) வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட வட்டார அளவிலான கரும்பு கொள்முதல் குழு, சென்னை மண்டல கூடுதல் பதிவாளரால் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், வேளாண்மை அலுவலர் , துணை வேளாண்மை அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் நிலையில் ஒரு அலுவலர் ஆகியோர் கொண்ட கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது.

நேரடி கொள்முதல்: அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை மின்னனுபரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது மாவட்ட வாரியாக இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தாங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,"என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details