தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உண்மையான டெங்கு காய்ச்சலை கண்டறிவதில் உள்ள சிக்கல்? - மருத்துவர் சாந்தி அளித்த விளக்கம் - DENGUE IN TAMIL NADU

தமிழ்நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பரிசோதனை செய்தால் தான் எத்தனை பேருக்கு டெங்கு என கண்டறிய முடியும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறியுள்ளார்.

டெங்கு தொடர்பான படம் , மருத்துவர் சாந்தி
டெங்கு தொடர்பான படம் , மருத்துவர் சாந்தி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 8:45 PM IST

சென்னை:காய்ச்சல் வரும் பொழுது என்ன காய்ச்சல் என்பதை பரிசோதனை செய்யாமல் இருப்பதால், உண்மையான டெங்கு காய்ச்சல் எத்தனை என்பது தெரியாத சூழல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பருவமழை துவங்குவதற்கு முன்னர் கூட இந்தமாதம் முழுவதும் காய்ச்சல் அதிகாித்து வருகிறது. குழந்தைகள் அதிகளவில் மழையால் பாதிக்கப்படுகின்றனர். மழையின் காரணமாக நீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி அதனால் நோய் வருகிறது.

மருத்துவர் சாந்தி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

டெங்கு, கரோனா, ப்ளூ வைரஸ் காய்ச்சல், இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்கள் வருகின்றன எனவே இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி டெங்கு காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சல் என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

குழந்தைகள் மீது அதிக கவனம் தேவை:தொடர்ந்து பேசிய அவர், "பரிசோதனை செய்யாமல் காலம் தாழ்த்துவதால் நோய் தீவிரத் தன்மை அடைந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தாலும் அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பர். இந்த நேரத்தில் காய்ச்சல் தீவிரமாக கண்காணிக்க வேண்டி உள்ளது பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வருவதை பார்க்கிறோம்.

மழை காலங்களில் காய்ச்சல் வரும் பொழுது இளம் வயதினரை தவிர குழந்தைகள் இணை நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய்க்கு ஊசி எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநாேய் உள்ளவர்களுக்கு ஒரு நாள் லேசான காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவர் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்கள் கூறும் பரிசோதனைகளை செய்து கொள்வதும் நல்லது உலகளாவிய அளவில் டெங்கு காய்ச்சல் இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு இருக்காது எனக் கூறிய நாடுகளிலும் டெங்கு இருக்கிறது.

டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்:குறிப்பாக இந்தியாவில் சில மாநிலங்களில் எப்பொழுதும் டெங்கு காய்ச்சல் இருக்காது. அந்த மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. தமிழ்நாட்டில் காய்ச்சல் வரும் பொழுது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் பரிசோதனை செய்தால் தான் எத்தனை பேருக்கு டெங்கு எனவும், வேறு வைரஸ் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதா என்பதை உணர முடியும். எல்லா டெங்கு காய்ச்சலும் சீரியஸாக வருவது இல்லை. பல நேரங்களில் டெங்கு காய்ச்சல் லேசாக வந்து மாத்திரை எடுத்தாலும் சரியாகிவிடும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:காய்ச்சல் வரும் பொழுது என்ன காய்ச்சல் என்பது பரிசோதனை செய்வதில்லை. இதனால் உண்மையான டெங்கு காய்ச்சல் எத்தனை என்பது தெரியாத சூழல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை காய்ச்சல் இருக்கும். உடல் வலி அதிகமாக இருக்கும், வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றல் ,உடல் சோர்வாக இருத்தல் ,மயக்கமாக இருத்தல் போன்றவை அறிகுறியாக இருக்கும் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

சர்க்கரை நோய் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நோய் உள்ளவர்களும், தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களும் லேசான காய்ச்சல் இருந்தாலும் மருத்துவரை அனுகுவது நல்லது. வெளிநாடுகளில் வைரஸ் காய்ச்சலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் இந்தியாவில் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என நாம் கூறுவதில்லை ஆனால் சமீப காலங்களில் வைரஸ் போன்றவற்றைத் தடுக்க தடுப்பூசியை ஆண்டுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது" என கூறுகிறோம்.

அரசு செய்ய வேண்டியது என்ன?:"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக் காலங்களில் முகாம்களை நடத்துவது நல்ல பலனை அளிக்கும். முகாமிற்கு வருபவர்களுக்கு காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் உள்ளனர். மருத்துவப் பணியாளர் தேர்வாணைய மூலம் 2000 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வினை நடத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தற்பொழுது வேலை இல்லா திண்டாட்டம் இருந்து வருகிறது. அரசாங்கத்தில் 2,000 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன எனவே உதவி மருத்துவர் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் அது முகாம்களை நடத்த பயனுள்ளதாக இருக்கும்" என மருத்துவர் சாந்தி தெரிவித்தாா்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details