தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்! - GK Vasan Statement about Farmers

GK Vasan: தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

GK Vasan Statement about Farmers
ஜி.கே.வாசன் எம்.பி அறிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 11:39 AM IST

சென்னை:முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி, இன்று (பிப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொண்டு வரும் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளிடம் ரூ.40 முதல் ரூ.50, ரூ.60 என வசூலிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, விவசாயிகள் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தில் விவசாயம் செய்கின்ற வேளையில், பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சிரமம் ஏற்படுகின்றது. எனவே தமிழக அரசு, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருக்கவும், நெல்லை எடை போடும்போது எடை சரியாக இருக்கவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு, காவிரி குண்டாறு திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் காவிரி குண்டாறு திட்டத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயனடைவர். தேர்தல் வாக்குறுதி 75-இல் தெரிவித்தபடி, ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ.2 ஆயிரத்து 500 என்பதையும், ஒரு டன் கரும்புக்கான ஆதார விலை ரூ.4 ஆயிரம் என்பதையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

குறிப்பாக தமிழ்நாடு அரசு, தேர்தல் வாக்குறுதி 66-இல் தெரிவித்தபடி, கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். மேலும், தேர்தல் வாக்குறுதி 56-இல் தெரிவித்தபடி பனைத் தொழிலை மேம்படுத்த பனை வெல்லத்தை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

அதேபோல, தேர்தல் வாக்குறுதி 57-இல் தெரிவித்தபடி தனி ஒரு விவசாயியின் விளைநிலம் பாதிக்கப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்பதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

எனவே தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் ஏதும் வசூல் செய்யாமல் இருப்பதற்கும், தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயம் சம்பந்தமாக தெரிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் மனைவிக்காக கடலுக்கு அடியில் சென்று உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி கவிஞர்!

ABOUT THE AUTHOR

...view details