சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனை என்றால் மின் கட்டண உயர்வை ஏற்றி மக்களுக்கு சுமையை ஏற்றியது தான். மின் கட்டண உயர்வு தொழில் முனைவோரை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தலாம் என வாக்குறுதி அளித்த திமுகவின் நிலைப்பாடு என்னவென்று மக்கள் கேட்கிறார்கள்.
மின் கட்டண உயர்வில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, மத்திய அரசை குறை காட்டுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மின் துறையில் வெளிப்படைத்தன்மை தேவை. தமிழகத்தில் திமுக அரசு மகளிருக்கு வலது கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு இடது கையில் மின் கட்டணத்தை உயர்த்தி பணத்தைப் பிடுங்குவது தான் திராவிட மாடலா? மின் துறையின் சீர்கேட்டிற்கும், கடன் சுமைக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்
ஆனால், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஜூலை 22ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் தமாகா தலைவர்களும், தொண்டர்களும் சேர்ந்து மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டி ஆட்சியரிடம் மனு வழங்க உள்ளோம்.