கோயம்புத்தூர்:வால்பாறை வாட்டர் ஃபால் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்தார். இதுகுறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டென்சி எனும் யானை
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கோவை மாவட்டம் வால்பாறை வாட்டர் ஃபால் பகுதியில் டென்சி என்ற 30 வயதான காட்டு யானை மற்ற காட்டு யானை கூட்டங்களில் சேராமல் தனியாக இருக்கிறது. அப்பகுதி மக்களால் 'டென்சி' என்று அழைக்கப்படும் இந்த யானை தனியார் எஸ்டேட் பகுதிகள், குடியிருப்பிடங்கள், வால்பாறை சாலை, சக்தி எஸ்டேட், கவர்கல் போன்ற பகுதிகளில் தனியாக சுற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று (பிப்.4) மாலை இந்த காட்டு யானை வாட்டர் ஃபால் டைகர் பள்ளத்தாக்கு சாலையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியே புல்லட்டில் சென்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல், யானையின் பின்புறம் வந்தபோது காட்டு யானை ஆக்ரோஷமாகியுள்ளது. பின்னர் அது மைக்கேலை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
உயிரிழந்த பயணி
யானை தாக்கியதில் காயமடைந்த மைக்கேலை அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் மீட்டு வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதை அடுத்து மேல்சிகிச்சைக்காக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.