தேனி:ஆந்திரா மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு கஞ்சா கடத்தி வந்திருப்பதாக, கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் பேரில், காவல் ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் கம்பம் குமுளி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, உரக்கிடங்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக 5 பேர் சாக்கு மூட்டைகளுடன் இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனால், காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த சாக்கு பையை சோதனை செய்துள்ளனர். இதில், 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் துளசி (வயது 43). இவர் ஆந்திராவில் உள்ள நாகராஜு என்பவரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கம்பத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.