கோயம்புத்தூர்:கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட எஸ்பி கார்த்திக்கேயன் எச்சரித்துள்ளார்.
கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் இன்று (ஆகஸ்ட் 25) சோதனையில் ஈடுபட்டனர். சட்ட விரோத செயல்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சோதனையின் போது கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புறநகரப் பகுதிகளில் மாணவர்கள் என்ற பெயரில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்று காலை 250க்கும் மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து செட்டிபாளையம், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இதில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய 36 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். படிக்கும் காலத்தில் கல்லூரி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.