தென்காசி: தென்னகத்தின் 'ஸ்பா' என சுற்றுலாப் பயணிகள் கொண்டாடும் குற்றால அருவிகளைக் கொண்ட தென்காசி தொகுதி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பெருமளவில் வாழும் பகுதி ஆகும். இங்கு நெல், வாழை, கரும்பு, எலுமிச்சை உள்ளிட்டவைகளின் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. சுற்றுலாத் தலம் மட்டும் அல்லாமல் குற்றால நாதர், காசி விஸ்வநாதர், சங்கரநாராயணர் கோயில், தோரண மலை முருகன் கோயில் என பல புகழ்பெற்ற ஆன்மிக தலங்களையும், அடவிநயினார் அணை, கடனா நதி அணை, குண்டாறு அணை, கருப்பா நதி ஆகிய நீர்த்தேக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தென்காசி நாடாளுமன்ற தொகுதி.
தொகுதி நிலவரம்:திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 2019ஆம் ஆண்டு பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.
தமிழகத்தின் 37வது நாடாளுமன்றத் தொகுதியான தென்காசி, தென் பகுதியில் உள்ள ஒரே தனி தொகுதி ஆகும். தென்காசி தொகுதியில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேர் ஆண்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேர் பெண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
1957-இல் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 9 முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.
எம்.அருணாசலம் 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், கடைசியாக 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 17வது மக்களவையின் தென்காசி தொகுதி எம்பியாக திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் உள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக ஆண்டவன் கட்டளையின் பேரில் உருவானதாகக் கூறப்படும் தென்காசியில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான கோரிக்கைகள் கூட நிறைவேறுவதேயில்லை என குமுறுகின்றனர் தொகுதி மக்கள். ஆனால் தொகுதியின் எம்பி பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தொகுதி நலனுக்கான நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளதாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர் சிலர்.
சமையல் கேஸ் டீலர் டூ எம்பி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் எம்.குமார். பி.இ., எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்தவரான தனுஷ் இண்டேன் கேஸ் டீலர் தொழில் மற்றும் விவசாயமும் செய்து வந்தார். இவரது தந்தை தனுஷ்கோடி, ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது தாயார் இந்திரா, ராஜபாளையத்தின் முன்னாள் ஒன்றிய சேர்மன் ஆவார்.
தந்தை, தாய் காட்டிய வழியில் 1996ஆம் ஆண்டு முதல் திமுகவில் பயணிக்கும் தனுஷ் எம்.குமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், திமுகவின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தீவிர விசுவாசியாக அறியப்படும் தனுஷ் எம்.குமார் 2019ஆம் ஆண்டில் அவர் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று எம்பியும் ஆனார்.
4 லட்சத்து 76 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்ற தனுஷ் எம்.குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தென்காசி தொகுதியைக் கைப்பற்றிய முதல் திமுக வேட்பாளர், முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புகழ் எல்லாம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை எனத் தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தான் ஒரு விவசாயி எனக் கூறி ஓட்டுக் கேட்டவர் விவசாயிகளின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை எனக் கொந்தளிக்கின்றனர் தொகுதி விவசாயிகள்.
வாக்குறுதிகள்: பூ விலை வீழ்ச்சியை சந்திக்கும் சமயங்களில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் செண்ட்(வாசனை திரவியம்) தொழிற்சாலை அமைக்கப்படும். செண்பகவல்லி அணை பிரச்சினையைத் தீர்ப்பேன். மாம்பழம் அதிகம் பயிரிடப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைப்பேன். விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்கக் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு அறிவேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகைகள் செய்து தருவேன் எனப் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
தொகுதிக்கு செய்தவை:விருதுநகர் - தென்காசி - செங்கோட்டை மார்க்கத்தில் ரயில் வழித்தடம் ரூ.161 கோடி மதிப்பில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் - கொல்லம் நான்கு வழிச்சாலை அகலம் 60 மீட்டரில் இருந்து 40 மீட்டராகக் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் அளவு குறைந்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை விரைவு வண்டி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகியவை புதிதாக இயக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை - மயிலாடுதுறை, மதுரை - குருவாயூர், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவை எம்.பி., தனுஷ் எம்.குமாரின் சாதனைகளாகக் குறிப்பிடப்படுகிறது.
நிறைவேற்றத் தவறியவை: திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ராஜபாளையம் முதல் வடகரை வரையிலான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் வைத்த கோரிக்கைக்குச் செவி சாய்க்காதது. குற்றாலத்தை மேம்படுத்தாதது, லெமன் சிட்டி என்ற பெயர் பெற்ற புளியங்குடியில் எலுமிச்சை சந்தை கொண்டு வராதது, செண்ட் ஆலை அமைக்காதது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
எம்பியை நம்பி ஏமாற்றமே மிச்சம்: அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பாலமுருகன் கூறுகையில், "செண்பகவல்லி கால்வாய் திட்டத்தைக் கொண்டு வருவேன் என சொன்னார் செய்யவில்லை. குற்றாலத்தை சிறந்த சுற்றுலாத் தலமாக்குவேன் என்றார் அதையும் செய்யவில்லை. இரட்டைக்குளம் கால்வாயைக் கொண்டு வருவேன் என்றார் அதையும் செய்யவில்லை. தென்காசியில் டிப்போ அமைப்பதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார் அதையும் செய்யவில்லை. திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனை போல சுரண்டையில் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார், அதையும் நிறைவேற்றவில்லை. எம்பியை நம்பி ஏமாந்து நிற்கிறோம்" எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறவில்லை: தேசிய விவசாயிகள் சங்க தென்காசி, திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் கூறுகையில், "விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு எம்பி குறிப்பிடும் வகையில் எதுவும் செய்யவில்லை. தென்காசி மக்கள் கடந்த காலங்களில் வறட்சியாலும், சமீபத்தில் வெள்ளத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டனர். வறட்சி, வெள்ள பாதிப்பின் போது எம்பி நேரடியாக வந்து விவசாயிகளைச் சந்தித்தது இல்லை. இனி வருகின்ற எம்பியாவது மக்களோடு மக்களாக, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த பகுதியில் எலுமிச்சை, பூக்கள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. அதனால் இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
தேவையற்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் அதிக மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பயிர்கள் அழுகி வீணாகி விடுகிறது. பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயி தடுப்பணையை உடைக்கும் நிலை கூட ஏற்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட தடுப்பணை வீணாகிறது.
மேலும், தடுப்பணைகளால் குளத்திற்குச் செல்லும் நீர் தடைப்படுகிறது. இதனால் குளத்தை நம்பி இருக்கும் பல ஏக்கர் பாசன நிலங்கள் நீர் இன்றி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு வறட்சி நிவாரண நிதி ஒவ்வொரு ஆண்டும் முறையாகக் கிடைப்பது இல்லை. அடுத்து வரும் எம்பி எங்கள் கோரிக்கையை அரசுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்வண்டி வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்: சுரண்டையைச் சேர்ந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் ராஜா கூறுகையில், "தொடர்வண்டி வசதிகளை செய்து கொடுத்துள்ளார். தென்காசியில் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காகவும், தொழில் முனைவோர்கள் வெளி மாநிலங்கள் செல்லவும் ஏதுவாக சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதுவும் விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
ESI மருத்துவமனை தரம் குறைவாக உள்ளது: பூ விவசாயி அந்தோணி கூறுகையில், "இங்கு 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரதான தொழிலாகப் பீடி சுற்றும் தொழில் தான் உள்ளது. ஆனால் இதற்கு சுரண்டையில் ஒரு இ.எஸ்.ஐ மருத்துவமனை தான் உள்ளது. அங்கும் சேவைகள் குறைவாகத் தான் உள்ளது. அந்த மருத்துவமனையை 50 படுக்கை வசதி உள்ள மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். அந்த மருத்துவமனை கோவில்பட்டியை சப் டிவிஷனாக கொண்டு செயல்படுகிறது, அதன் சப் டிவிஷனையும் தென்காசிக்கு மாற்ற வேண்டும். சுரண்டை தபால் நிலையத்தையும் தரம் உயர்த்த வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கும் திருநெல்வேலி தான் செல்ல வேண்டியுள்ளது. அதற்கான வசதிகளையும் தென்காசியில் ஏற்படுத்த வேண்டும்" என வேண்டுகோளை முன்வைத்தார்.
நிதி ஒதுக்கியும் வேலை நடக்கவில்லை: சமூக ஆர்வலர் பிரசாத் கூறுகையில், "தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை பகுதியில் ஒரு நூலகம் 25 வருடங்களாக இயங்கி வருகின்றது. அந்த நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் தான் உள்ளது. மழை பெய்யும் சமயங்களில் கட்டிடத்தினுள் மழை நீர் ஒழுகுவதால் மக்கள் உள்ளே அமர்ந்து படிக்க முடியாத சூழல் தான் உள்ளது. இந்த நூலகத்தைச் சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். எம்பியும் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதற்கான வேலை நடக்கவில்லை. பள்ளி மாணவர்கள், அரசு தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் எனப் பலரும் பயன்படுத்தும் இந்த நூலகத்தை அடுத்து வரும் எம்.பியாவது சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.