ஊட்டி ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டு நீலகிரி: இளம் நடிகர் விஜய் விஷ்வா, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி சாஸில் கெட்டுப்போன வாசனை வந்துள்ளது. இதனால், அந்த தக்காளி சாஸ் பாட்டிலை திறந்து பார்த்த நிலையில் அதில் புழுக்கள் இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய் விஷ்வா, இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டும் அலட்சியமாக பதில் அளிப்பதாக புகார் அளித்து வெளியிட்ட வீடியோ வைரலாகியது. வீடியோ வைரலான நிலையில், புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமார் நேற்று (திங்கட்கிழமை)ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஆய்வுக்குப் பின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த உணவகத்தில் இருந்த தக்காளி சாஸில் புழு இருப்பதாக துணை நடிகர் விஜய் விஷ்வா சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்தார். அதன் அடிப்படையில், இந்த உணவகம் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிருந்து, சட்டபூர்வமாக உணவு மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதில், புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உணவகத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, ஹோட்டல் மேலாளர் டோமினிக் கூறுகையில், “நாங்கள் எங்களது நிறுவனத்தில் தக்காளி சாஸ் தயாரிப்பது இல்லை. வெளியில் இருந்து வாங்கி வருகிறோம். ஆனால், அதனுள் புழுக்கள் இருந்தது தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில்,ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகள் சரியாக உள்ளதா என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை" - பனைத் தொழிலாளர்கள் கூறும் குற்றச்சாட்டு என்ன? - Nungu Special Story