மதுரை:மதுரையைச் சேர்ந்தவர் 101 வயது சுதந்திரப் போராட்ட தியாகி அழகம் பெருமாள். இவர் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததை மதுரையில் ரயில்வே கோட்டம் நினைவு கூர்ந்துள்ளது. மதுரை - பெங்களூர் கண்டோண்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை (ஆகஸ்ட் 28) சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா மற்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பார்வையாளர்களாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும், பேரையூர் பகுதியில் இருந்து 101 வயதுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி அழகம் பெருமாளும் கலந்து கொண்டது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இவர் 1924ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் எதிரே ஆகஸ்ட் புரட்சியான "வெள்ளையனே வெளியேறு" சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். இதன் காரணமா,க இவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அல்லிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.