சென்னை:இந்தியாவின் 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நான்கு முனை போட்டியாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு அதன் பரிசீலனை பணிகளும் நடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பிரசார பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்கள்:தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, ராமநாதபுரம் தொகுதி மிகுந்த கவனத்திற்குள்ளானது. காரணம் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்தாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஸ்.கே.கனி, அதிமுக கூட்டணியில் சார்பாக ஜெய பெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பாக சந்திர பிரபா மற்றும் பாஜக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
ஓபிஎஸ்-க்கு எதிராக கிளம்பிய ஓ.பன்னீர்செல்வங்கள்: கடந்த 25ஆம் தேதி காலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அன்றைய தினம் மாலையே, உசிலம்பட்டி அடுத்த மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, மறுநாள் காலை (மார்ச் 26) ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர், மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த வாகைகுளத்தைச் சேர்ந்த ஒச்ச தேவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் ஆகியோரும் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான மார்ச் 27ஆம் தேதி, கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்படி ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பன்னீர்செல்வம் எனும் பெயரில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பன்னீர்செல்வங்களின் பின்னணி என்ன? ராமநாதபுரத்தில் போட்டியிடும் பன்னீர்செல்வங்களில் ஒரு பன்னீர்செல்வத்தின் பின்னணி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் மீதுமுள்ள 5 பேரில் மூவர் விவசாயிகள், ஒருவர் சுமை தூக்கும் தொழிலாளி, மற்றொருவர் டீக்கடை உரிமையாளர். வேட்புமனு இணைக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பு மற்றும் சுய விவரங்கள் அடிப்படையில் இதில் பலருக்கு சொந்த வீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியின் சதியா?:இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த மாபெரும் எழுச்சியை கண்டு எடப்பாடி பழனிசாமியின் துரோக குப்பல், தமிழகம் முழுவதும் தேடிப்பிடித்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட அப்பாவிகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்:இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது பேசிய அவர், "சுதந்திர நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. ஏன் அவர்களுகு தகுதி இல்லையா?, எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:"மைக் சின்னத்தை மறந்துடாதீங்க" - சின்னத்தை கொண்டு சேர்க்குமா நாம் தமிழர்?