தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை அருகே நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி - TIRUNELVELI ACCIDENT - TIRUNELVELI ACCIDENT

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் இரு சிறுமிகள் உடபட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார்.

விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் ரூபேஷ்குமார் மீனா ஐபிஎஸ்
விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் ரூபேஷ்குமார் மீனா ஐபிஎஸ் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 11:31 AM IST

Updated : Sep 17, 2024, 2:09 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(45). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு மகள்கள் மாரீஸ்வரி(12) மற்றும் சமீரா(7) மற்றும் அவரது மாமியார் ஆண்டாள் (65) ஆகியோரை அழைத்துக் கொண்டு வண்ணாரப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலை உலகம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனம் சென்றபோது எதிரே சேரன்மகாதேவியில் இருந்து தச்சநல்லூர் பெட்ரோல் கிடங்கிற்கு டீசல் ஏற்ற டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. லாரியை பத்தமடை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் லாரி வந்தபோது லாரி எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:நண்பனின் இல்ல நிகழ்வுக்கு சென்ற இடத்தில் சோகம்.. நெல்லை தாமிரபரணி கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு!

நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் டேங்கர் லாரியை பறிமுதல் செய்ததோடு லாரி ஓட்டுநர் கணேசனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்களை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது. புறவழிச்சலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல் செய்யப்பட உள்ளது. இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

Last Updated : Sep 17, 2024, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details