ஈரோடு:மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் சிந்தாமணி கண்மாய் அருகே கடந்த ஜூலை 21ஆம் தேதி டாஸ்மார்க் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது இரு தரப்பு ரவுடிகளிடையே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறின் போது சண்டையை விலக்கிவிட்ட மனோஜ் (25) என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவனியாபுரம் போலீசார், தனிப்படை அமைத்து கொலையில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில், மனோஜ் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் சரணடைய வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையறிந்த சத்தியமங்கலம் போலீசார், நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாராணையில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(21), அரிமணி(22), கருப்பையா (21) மற்றும் செல்வகுமார்(26) என்பது தெரிய வந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் கொலை சம்பவம் நடந்த மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஈரோடு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன், நான்கு பேரையும் வாகனத்தில் ஏற்றி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய திக்..திக்! - சார்பதிவாளர் சிக்கியது எப்படி?