சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் அவர் 50 ஆண்டு காலமாக இந்தியாவிற்கு ஆற்றிய சேவை பணியை கொண்டாடும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே வாசன், கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதிஷ், நமிதா உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாடகி எஸ்.பி சைலஜா, நடிகர் விஷால், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார், பத்ம விபூஷன் வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். மேடையில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "வெங்கையா நாயுடுவை இந்தியாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தேசப்பற்று, தாய் பற்று, எடுத்துக் கொண்ட முடிவில் உறுதி, கடின உழைப்பு, மனிதநேயம் என அனைத்திலும் சிறந்தவர்.
விவசாயியாக இருந்து இந்தியாவின் உயரிய பதவியான துணைத் குடியரசு தலைவராக இருந்தவர். எனது தந்தை ஜி.கே மூப்பனாரும், வெங்கையா நாயுடுவும் மிகவும் நெருங்கியவர்கள். வெங்கையா நாயுடுவின் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததில் பெருமை. வெங்கையா நாயுடுவின் பணி நாட்டுக்கு தொடர்ந்து தேவை" என தெரிவித்தார்.
மேடையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "தாய் நாட்டிற்கும், தேசத்திற்கு பல நல்ல பணிகளை செய்தவர். வெங்கையா நாயுடுவின் வார்த்தைகள் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் பாய்ந்திருக்கிறது. அவருடைய சேவை தாய் நாட்டிற்கு தொடர்ச்சியாக தேவை" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பழகுவதற்கு நல்ல பண்பாளர். தாய்மொழிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர். பன்முகத்தன்மை கொண்டவர். இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிக்கு ஒப்புதல் வழங்கியவர். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடிய சமூக போராளி. அரசியலுக்கு ஓய்வு கிடையாது. அவரது பணி தொடரவேண்டும்" என கூறினார்.
இதன்பிறகு மேடையில் பேசிய நடிகர் விஷால், "நீங்கள் அரசியல் வாதி மட்டுமல்ல, அதற்கும் மேல் சிறந்தவர். எனக்கும் ஊக்கம் அளிப்பவர். வெங்கையா நாயுடுவை பார்த்து மற்ற அரசியல்வாதிகளுக்கு கூட இவரை போன்ற அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எனக்கு கூட இவரை போன்ற அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை வரலாம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "என்னை போன்றோர் மேடையில் நிற்க காரணம் வெங்கையா நாயுடு தான். கட்சியில் சேர்ந்த போது எனக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமாக இருந்தவர். அடுக்கு மொழியை அடுக்கடுக்காக பேசுவதில் கைத் தேர்ந்தவர். ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் புரிய வைப்பவர். எங்களுக்கெல்லாம் பாஜகவில் முன் உதாரணமாகவும் பக்க பலமாகவும் இருந்தவர். ராஜ்ய சபாவில் அவர் நடந்து வருவதையே வியந்து பார்ப்பேன்" என கூறினார்.
பின்னர் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், "வெங்கையா நாயுடு உடன் ஏறத்தாழ 15 ஆண்டுகள் நட்புடன் பழகி வருகிறேன். நாங்கள் பல பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளோம். அதற்கெல்லாம் தலை சிறந்த தலைவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைப்போம்.