திருச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஒரு சில தொகுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கட்சிகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் மற்றும் அரவணைப்புகளின் வெளிப்படை தான் இந்த தேர்தலின் முடிவுகள். அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து செயல்பட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடும் போது, ஓபிஎஸ் அணியிலிருந்து நான் வெளியேறி விட்டேன். ஓபிஎஸ் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது.
அனைவரும் ஒன்றிணைந்து யாரை தலைவராக நிறுத்தினாலும், அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால், தொண்டர்களை ஒன்று கூட வைக்க வேண்டும். 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார். இப்போது, அதுபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.