தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி சிறுவன் மர்ம மரணம்; ' காவல்துறையினர் துரிதமாக செயல்படவில்லை' - கடம்பூர் ராஜூ குற்றசாட்டு - THOOTHUKUDI BOY DEATH

தூத்துக்குடியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் கூறினார். காவல்துறை துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை காப்பாற்றி இருக்கலாம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுவன் குடும்பத்தை சந்தித்த கடம்பூர் ராஜூ
சிறுவன் குடும்பத்தை சந்தித்த கடம்பூர் ராஜூ (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 3:38 PM IST

தூத்துக்குடி:மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, தனியாக இருந்த கருப்பசாமி திடீரென மாயமாகியுள்ளான். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கன்னெடுக்கப்பட்டான். மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து நான்கு நாட்களாகியும் போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

மயங்கி விழுந்த மூதாட்டி

இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியை சந்தித்து நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சிறுவனின் பாட்டி கோட்டைத் தாய் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து அவரை தேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் மீது குற்றசாட்டு

இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில், '' காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு இருந்தால் கருப்பசாமியை உயிரோடு மீட்டிருக்கலாம். போதை பொருட்களால் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. உயிரிழந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை என்பது அதிகமாக நடைபெற்றுள்ளது.

எளிய குடும்பம்

இதுகுறித்து இப்பகுதி மக்களும், உயிரிழந்த சிறுவனின் தாய் பாலசுந்தரி ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். உயிரிழந்த சிறுவன் குடும்பம் என்பது அன்றாட வேலை செய்து பிழைக்கக்கூடிய குடும்பம். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்'' என்றார்.

மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட சிறுவன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

சிறுவன் மர்ம மரணம் குறித்து கோவில்பட்டி டி.எஸ்பி. ஜெகநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வீடு, வீடாக சோதனை நடத்திய போலீசார் அப்பகுதியில் உள்ள மாடி, குடிநீர் தொட்டிகள் போன்றவற்றிலும் சோதனை செய்தனர். சிறுவனின் சடலம் எடுக்கப்பட்ட மாடி வீடு என்பது சிறுவனின் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்த வீட்டின் பகுதியில் உள்ள சந்து வழியாக உடலை எடுத்து வந்து வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உடலில் எவ்வித காயமும் இல்லை, ஆனால் இறந்து பல மணி நேரம் இருக்கலாம். உடற்கூறு ஆய்விற்கு பின்னர் தான் எப்படி இருந்திருக்கலாம் என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details