தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பங்களாவில் மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மனு; தள்ளுபடி செய்ய பீலா வெங்கடேசன் வலியுறுத்தல்! - Former DGP Rajesh Das

Former DGP Rajesh Das: மின் இணைப்பு துண்டிக்கபட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 9:00 PM IST

சென்னை:முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேஷனும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கப்பட்டது. தற்போது இருவரும் பிரிந்ததால் பீலா வெங்கடேஷ் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் கடந்த மே 18ஆம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியைத் தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பியுள்ளார்.

மேலும், தனது பெயரில் உள்ள தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தையூர் பங்களாவிற்கு மின் இணைப்பு துண்டிக்கபட்டது. இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெ.சத்யநாராயணா பிரசாத் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீலா வெங்கடேசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், வீட்டின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனு செல்லத்தக்கது அல்ல எனவும், பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளதாக வாதிட்டார்.

மேலும், நிலத்தின் முக்கிய பகுதி தனது தந்தையின் பெயரில் இருந்ததாகவும், அதனை தனது பெயருக்கு மாற்றி தற்போது அந்த நிலத்தை குழந்தைகள் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் பீலா வெங்கடேசன் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராஜேஷ் தாஸ்-க்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடும், பல இடங்களில் லாட்ஜ்கள் உள்ளதால் அவர் அங்கேயே தங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நெல்லையில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 பேர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details