சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்என்ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் டிஜிபி ஜாங்கிட் முனைவர் பட்டம்: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், காவலர்களின் பணியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கூறியதாவது, “ குற்றங்களை தடுப்பதற்கு இது உதவியாக இருக்கும். இந்த ஆய்வினை 2016ல் தொடங்கி கடந்த ஆண்டில் முடித்தேன். இந்த ஆய்வினை காவல்துறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க:பக்கவாதத்திற்கு சித்த மருந்து கண்டுபிடித்த பேராசிரியர்.. 78 வயதில் கிடைத்த முனைவர் பட்டம்!
தொடர்ந்து, ஈடிவி பாரத்திற்கு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் அளித்த சிறப்பு பேட்டியில், “காவல் துறையில் பணியாற்றுவதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினேன். தொடர்ந்து, காவல்துறையில் நான் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே, காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்தேன்.
ஆய்வு: எந்தப் பொருளையும் அளவிட்டு, மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல், காவல்துறையில் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் பணியாற்றும் காவலர்கள் எப்படி பணியாற்றுகின்றனர், எத்தனை புகார்களை கையாளுகின்றனர், எவ்வளவு நேரம் பணியாற்றி உள்ளார்கள் உள்ளிட்டவை குறித்டு அனைத்து மதிப்பீடுகள் வழங்கும் வகையில் ஆய்வு செய்துள்ளேன்.
இதன் மூலமாக மக்களுக்கு போலீசால் நல்ல பாதுகாப்பு கிடைக்கும். தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த ஆய்வு அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இதனை தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பட்டம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.