இந்து நாடாரா? கிறிஸ்தவ நாடாரா? நெல்லை காங்கிரசில் போட்டி வேட்பாளர் சொல்வது என்ன? திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல்: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கடைசி நாளான நேற்று இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
எம்.பி.ராமசுப்பு வேட்பு மனு தாக்கல்: இந்நிலையில், அவருக்கு போட்டியாக திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.ராமசுப்பு தனது ஆதரவாளர்களுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசில் ராமசுப்பு வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்: வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த ராமசுப்பு, நான் காங்கிரஸ்காரன். சுயேச்சையாக போட்டியிடவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் திமுக கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ததன் கட்டாயம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வேட்பு மனு என்பதை காட்டிலும் நான் இந்த கட்சிக்கு உரிமையாளன். 5 வயதில் இருந்து காங்கிரஸ் கொடியை தோளில் சுமந்து, 60 ஆண்டு கால காங்கிரஸ் குடும்பம் நாங்கள் என்றார்.
மேலும், “ மக்களுக்காக பணியாற்றிய எனக்கு காஸ்கிரசிடம் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. எனது உரிமையை மீட்க வேண்டும் என்பதற்காக நானும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது வேறு விஷயம் ஆனால், எனது குரல் நெரிக்கப்படக்கூடாது.
இந்த வேட்பாளர் தேர்வு திருநெல்வேலியில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்ற பயம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால், நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வலுவான வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக தேர்வு செய்வதன் மூலம் , வெற்றி அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. நாம் காங்கிரஸ்காரன். சுயேட்சையாக என்னால் நிற்க இயலாது. டம்மியாக என்னால் நிற்க இயலாது என்றார்.
ராபர்ட் புரூஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் பாஜக வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்பு அதிகம் உள்ளதா?என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவிற்கு இது சாதகமாக உள்ளது. அவர்கள் வெற்றியடைவதற்கு இது ஒரு வாய்ப்பு. பாஜக மக்கள் விரோத கட்சி. அவை திருநெல்வேலியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அவர்களுக்கு நீங்கள் உயிரோட்டத்தை கொடுத்து விடாதீர்கள். பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏன் காங்கிரஸ் உருவாக்குகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் நடந்தது என்ன?டெல்லியில் நான் உட்பட, சீட் கேட்டு பலர் விண்ணப்பித்தனர். ஆனால் டெல்லியில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. நான் எனது உரிமை நிலைநாட்டவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கட்சியில் உட்கட்சி பூசல் என்பது கிடையாது. இது எனது உரிமைப் போராட்டம்” என்று கூறினார்.
1972 ஆம் ஆண்டிலிருந்து இந்த பயணத்தை நான் தொடங்கினேன். வங்கியில் பணியாற்றிய என்னை கட்சியில் பணியாற்றும்படி பலர் அழைத்தனர். அந்த அழைப்பை ஏற்று கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினேன். 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில், திருநெல்வேலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக ரயில் நிலையம் ரூ.9 கோடியில் சீரமைக்கப்பட்டது. அகல ரயில் பாதை ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டது மற்றும் விவசாய திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளேன் என்றார்.
தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதன் அடிப்படையில், நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளருக்கு வாய்ப்பு கேட்டிருந்தேன் அதன்படி, கட்சியின் உயர்மட்ட குழுவும், வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை தான் முதலில் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து, யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்பதை முடிவெடுக்க காங்கிரஸ் தலைமை, 3 தனியார் ஆய்வுகளை தொகுதியில் நடத்தியது.
பொதுமக்கள், காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் நான் தான் வேட்பாளர் என்று எதிபார்த்தனர். ஆனால், அந்த ஆய்வு அறிக்கையில், எதிர்பாராத விதமாக கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், பாஜகவை வெற்றி அடையச் செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளார்களா என்று மக்கள் தவறாக நினைக்கின்றனர். பொதுவானவரை வேட்பாளராக தேர்வு செய்தால் தான் திருநெல்வேலிக்கு வலு சேர்க்கும் என்று கூறினார். இதனிடையே ராமசுப்புவின் வேட்புமனு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆ.ராசா வேட்புமனு ஏற்பு - Parliament Election 2024