தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை.. யாருக்கு ஆதரவு? - ஓ.பன்னீர்செல்வம் பதில்! - O PANNEERSELVAM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை, யாருக்கு ஆதரவளிப்போம் என்பது ரகசியம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 7:35 PM IST

திண்டுக்கல்:திமுக ஆட்சியில் எதேச்சதிகாரமும், அதிகார துஷ்பிரயோகங்கள் என்று அனைத்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருக்கும். அதனால் நாங்கள் எந்த வேட்பாளரையும் தேர்தலில் நிறுத்தவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று (ஜன.19) ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை, வாக்களிப்போம். யாருக்கு ஆதரவளிப்போம் என்பது ரகசியம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக கட்சி மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வெல்ல முடியாத இயக்கமாக வளர்ந்துள்ளது. அதிமுக கட்சி தற்போது பிரிந்து கிடக்கின்றது. அனைத்து சக்திகளும் இணைந்தால் தான் எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி என்ற சூழல் உள்ளது” என்று தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது குறித்த கேள்விக்கு, “ தற்போது நடைபெறுகின்ற திமுக ஆட்சியில் எதேச்சதிகாரமும், அதிகார துஷ்பிரயோகங்கள் என்று அனைத்தும் இந்த தேர்தலில் இருக்கும். அதனால் நாங்கள் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை" என்று பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து, அதிமுக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். ஒன்றிணைத்த பின்பு இபிஎஸ் அந்த ஒன்றிணைப்பு குழுவில் இடம் பெறுவாரா? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details