வேலூர்:நியுயாா்க் மாகாணத்தின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற விஐடி வேந்தா் விஸ்வநாதனுக்கு, வேலூர் மாவட்ட அனைத்து சங்கங்கள் மற்றும் தலைமுறைப் பேரவை இணைந்து பாராட்டு விழா காட்பாடி தனியாா் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
வேலூரில் உள்ள 25 தொழில் அமைப்புகள் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரளா ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிபதி பதவி என்பது ஒரு சன்யாசி பதவியாகும். உழைப்பவர்கள் கண்டிப்பாக முன்னேற வேண்டும். நீதிபதியாக இருக்கும் போது மும்பை வெடிகுண்டு வழக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு, மனிதக் கழிவுகள் மனிதனே அகற்றுதல் தொடர்பான வழக்கு, ஊனமுற்றோருக்கான சலுகை குறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.
நான் ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு கேரள மாநிலத்தில் சிறந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட விஐடி தற்போது சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் விஐடியில் சேர வேண்டும் என ஏராளமான மாணவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏனென்றால், இங்கு தான் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது.
விஐடி வேந்தா் விஸ்வநாதன் நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் புரிந்துள்ளாா். இவா், 1984இல் தொடங்கிய பொறியியல் கல்லூரி 2001-இல் விஐடி பல்கலைக் கழகமாக உயா்ந்ததுடன், தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசு பாராட்டி உள்ளது. வேந்தர் பல ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியுள்ளார்.