திருச்சி:திருச்சி பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பாஜகவின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும் காவல்துறையின் வேலையாக உள்ளது. ஆனால், ஆளுநருக்கு எதிரான அவப்பெயரை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை.
ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பினர் நெருக்கடி நிலையை எதிர்த்து 1970ஆம் ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் உதயநிதிக்கு பதவி வந்தால் போதும் என்று எண்ணும் ஸ்டாலின், கடந்த காலத்தில் அவரை தாக்க முயன்றபோது, அதனை தடுத்த சிட்டிபாபு சிறையில் வாடி உயிரிழந்தது குறித்து நினைவிருக்காது. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் ஒட்டுமொத்த கும்பல் இந்தியா கூட்டணி. இந்த சர்வாதிகார கும்பல் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாஜகவில் சாதிப் பாகுபாடு என்பது இல்லை. தமிழகத்தில் கிருபாநிதி தலைவராக இருந்தார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் டெல்லியில் அகில இந்திய தலைவராக பங்காரு லட்சுமணன் இருந்தார். அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பேசுவதை கண்டு கொள்ளக்கூடாது. சாக்கடையில் கல் எரிந்தால் மேலே தெளிக்கும் என்பதால் சூர்யா சிவாவை பத்தி பேசுவது தேவையில்லை.
சபையில் வாதம் செய்ய அனுமதிக்காததால் வெளிநடப்பு என அதிமுக தலைவர் கூறியுள்ளார். இந்த அரசு தீய நோக்கம் கொண்ட அரசு. விசாராயம் வழக்கில், ஆட்சியர் கொடுத்த அறிக்கை என்பது முதல்வர் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு தெரியாமல் ஆட்சியர் கொடுத்துள்ளாரா என்பதை விளக்க வேண்டும்.
சிபிஐ விசாரணை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில் 59 இழப்புகள் ஏற்பட்டு 120க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மறைக்க நிர்வாகமே முயற்சி செய்யும்பட்சத்தில் அரசின் நோக்கம் தவறானது. எனவே, இதில் சிபிஐ விசாரணை தேவை என்பது பாஜகவின் எண்ணம். தீய எண்ணம் கொண்ட திமுகவின் கீழ் உள்ள துறையின் சிபிசிஐடி விசாரணை என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.