மதுரை: கரூரில் போலிச் சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளர் அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் 12ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூன் 14ஆம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே நாளில், வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஜூன் 22ஆம் தேதி 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்க வேண்டும் எனக் கூறி, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மற்றும் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.