சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒருபகுதியாக சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, அதிமுக சென்னை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் ஊழல் ஆகியவற்றில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
DMK என்பது Drug Mafia Kazhagam என்று சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் போதைப் பொருள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் சீரழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால், ஆளும் கட்சியே போதைப் பொருள் விற்பனையை ஊக்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது.
ஜாபர் சாதிக் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காது அவரை காப்பாற்றத் தான் முயற்சிக்கும். மத்திய அரசு தான் இதில் தலையிட்டு ஜாபர் சாதிக்கிடம் யார் யார் பணம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மைகளை வெளி கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.