தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சின்னூர், பெரியூர் மலை கிராமத்திற்கு மேல் தேவதானப்பட்டி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று (மார்ச் 13) மாலை முதல் காட்டு பற்றி தீ எரியத் துவங்கிய நிலையில், தீ மளமளவென பரவி, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வருகிறது.
இதேபோல், தேனி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணைக்கு மேல் அகமலை வனப்பகுதியில் ஊரடி ஊத்துக்காடு கிராமத்தின் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. தொடர்ந்து நாள்தோறும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயினால் அரிய வகை மரங்களும், மூலிகை தாவரங்களும் நெருப்பிற்கு இரையாகும் நிலை உருவாகி உள்ளது. வனவிலங்குகள் மற்றும் பறவைகள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல் வனங்களில் வாழும், காட்டு மாடு, மான் மற்றும் சிறிய வகை வன உயிரினங்கள் இடம் பெயர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விலை நிலங்களில் புகுந்து விவசாய விளை பொருட்கள் சேதப்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.