சென்னை:சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீலகிரி வரையாடு திட்ட முடிவு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு வரையாடுகள் குறித்த திட்ட முடிவை வெளியிட்டார். அதை தொடர்ந்து வரையாடு முகம் பதித்த தபால் தலையையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் வன விலங்கு சார்ந்த குறும்படங்களை காணும் விதமாக பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 7டி தொழில்நுட்ப திரையரங்கையும் திறந்து வைத்ததோடு, தினசரி 180 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
அமைச்சர் பொன்முடி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில்," நீலகிரி வரையாடு திட்டத்தை நம் மாநிலத்தின் சிறப்பு திட்டமாக முதல்வர் சட்டப்பேரவையில் 2023ம் ஆண்டு அறிவித்தார். மேலும் வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காகவும் உள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
வரையாட்டிற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் என மொத்தம் 2200 வரையாடுகள் இருக்கின்றன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 டி திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு வனத்திலும் வனவிலங்குகள் எப்படி உள்ளது என்பது காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதனைப் பூங்காவை சுற்றிப் பார்க்க வருபவர்கள் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன் முதலில் இங்கு தான் 7டி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 32 பேர் அமரலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தினசரி 180 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் எனர்ஜி பூங்காவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாது தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்கும் வாகனங்கள் 10, இரண்டு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது எப்படி? ரயில்வே விருதுக்கு தேர்வான ஸ்டேஷன் மாஸ்டர் நெகிழ்ச்சி பேட்டி!
மேலும் வேடந்தாங்கல் பறவை கூடம், பல்வேறு பறவைகள் தங்கக்கூடிய வகையில் 2.1 கோடி செலவில் நிறுவப்பட்டிருக்கிறது. வனத்துறையில் பல ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். வனத்துறையில் கடந்த 10 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் விவரம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் வருகிறது" என தெரிவித்தார்.