சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானிபூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். ஒவ்வொரு கடைகளாகச் சென்று கடைகளுக்கு லைசன்ஸ் இருக்கிறதா என்பதை கேட்டறிந்தனர். மேலும் பானிபூரி, மசால், chat items சுகாதாரமான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து டீக்கடை, சிப்ஸ் கடை உள்ளிட்ட கடைகளிலும் சோதனை செய்தனர்.
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், "கர்நாடகாவில் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பானிபூரியிலிருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் தமிழகத்திலும் சோதனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி சாப்பிடும் நிலையில் கலப்படம், ரசாயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பானிபூரி கடைகளிலும் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் அதிகமாக கடைகள் இருப்பதால் 3 குழுவாக பிரிந்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். மொத்தமாக 20 நபர்கள் உள்ளோம்.