தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையின் கீழ், உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சியில், எட்டயபுரம் சாலையில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் நேற்று (மே 15) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின்போது, நேற்று முன்தினம் சமைத்து விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகைகள், 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டன. உடனே அவை பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டன.