விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று (டிச.28) புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் மூத்த மகளின் மகன் முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் மேடையிலேயே ஏற்பட்டது. கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது ராமதாஸ் '' இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள்'' என காட்டமாக கூறினார்.
அன்புமணி பேட்டி (Credits -ETV Bharat Tamilnadu) இதனால் ஆவேசமான அன்புமணி ராமதாஸ் '' நான் பனையூரில் புதிய கட்சி அலுவலகம் அமைத்துள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்'' என்றும் ஆவேசமாக கூறி மைக்கை தூக்கி வீசி விட்டு, கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
ஒரே மேடையில் ராமதாசும், அன்புமணியும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்புமணி, கட்சி நிர்வாகிகள், ராமதாஸ் (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பா.ம.க. வில் தந்தை Vs மகன் மோதல் : புதிய அலுவலகம் திறந்தார் அன்புமணி
நேற்றைய பொதுக்கூட்டத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் சுமுக முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அன்புமணி, கட்சி நிர்வாகிகள் (Credit - ETV Bharat Tamil Nadu) இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ” கட்சி வளர்ச்சி பற்றியும், சட்டமன்ற தேர்தல் பற்றியும், சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாய போராட்டங்களை அடுத்து முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் பற்றியும் இன்று ஒரு குழுவாக விவாதித்தோம். வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கிய ஆண்டு. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசித்தோம்” என்று கூறினார்.
அதன் பிறகு நேற்று பொதுக்குழு கூட்டத்தில் நடந்த காரசார விவாதம் பற்றி பேசுகையில், “பாமக ஒரு ஜனநாயக கட்சி. இதில் காரசாரமான விவாதம் நடப்பது வழக்கம் தான். இளைஞரணி விவகாரம் என்பது எங்கள் உட்கட்சி பிரச்சனை. அதை பற்றி வேறு யாரும் பேச வேண்டாம்'' என காட்டமாக பதில் அளித்தார்.