ஈரோடு:கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்களின் வழியாக அதிக அளவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நம்பியூர், வரப்பாளையம், கோரக்காடு, ஆண்டிகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர்ப் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர் கனமழை காரணமாக குளத்திற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததைத் தொடர்ந்து, குளத்திலிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது. மேலும், குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில், 155-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது குளத்திவ் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.