சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அம்மழை அவ்வப்போது விட்டு விட்டு, இரவு முழுவதும் நீடித்ததால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்து, தத்தளித்துக் கொண்டு இருந்தன.
அதில் வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த மதுரை, டெல்லி, அயோத்தி, லக்னோ, கோவை, ஹைதராபாத், ராஞ்சி, மும்பை, கோழிக்கோடு, கவுகாத்தி, துபாய், பக்ரைன், ஃபிராங்பார்ட் உட்பட 15 விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. இருந்தாலும், வானிலை சீராகவில்லை.
அதனால், 269 பயணிகளுடன் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 232 பயணிகளுடன் பகரைனிலிருந்து வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், 172 பயணிகளுடன் கவுகாத்தியிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 168 பயணிகளுடன் மும்பையிலிருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்களும் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தபடி இருந்தன.