சென்னை:சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு (புதன்கிழமை) பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, அபுதாபியில் இருந்து 247 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துப் பறந்து கொண்டு இருந்தது. அதன்பின்பு, அந்த விமானம், பெங்களூரூக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல, 128 பயணிகளுடன் கோவையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துப் பறந்து விட்டு, அந்த விமானமும் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது. அதுமட்டுமின்றி, கோவா, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து நீண்ட நேரம் பறந்த படி தத்தளித்துக் கொண்டிருந்தன.
அதைபோல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களான டெல்லி, மும்பை, கொச்சி, கொல்கத்தா, கோவை, ஜெய்ப்பூர், சிங்கப்பூர், அபுதாபி உட்பட 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பின்னர், இரவு 10 மணிக்கு மேல் மழை சூறைக்காற்று, இடி மின்னல் ஓய்ந்ததும், வானில் வட்டமடித்துப் பறந்து கொண்டு இருந்த 5 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 விமானங்கள் என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு வந்து தரையிறங்கின.
மேலும், மழை காரணமாக சென்னையிலிருந்து புறப்பட முடியாமல் நின்று கொண்டிருந்த 12 விமானங்களும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜூன் 8-ல் கூட்டம்.. நெல்லை மேயர் ராஜினாமா பின்னணி என்ன? முன்னாள் மாவட்டச் செயலாளரின் சூழ்ச்சியா?