சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று (ஆக.30) இரவு சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இயங்கும் பெருமளவு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல், பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுமட்டும் அல்லாது, மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்; வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்; டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகியவை தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானிலேயே வட்டமடித்தபடி பறந்தது.
அதேபோல, லக்னோவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்; டெல்லியில் இருந்து சென்னை வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் மும்பையில் இருந்து சென்னை வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து தத்தளித்தது.