சென்னை:சென்னை-மொரிஷியஸ் இடையே வார நாட்களான, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் விமானச் சேவை இயக்கப்பட்டது. பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நிறுத்தப்பட்டது. இருப்பினும், இன்று வரை விமானச் சேவைகள் இயக்கப்படாமல் இருந்தது.
இதனால் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னையில் இருந்து, டெல்லி, மும்பை, துபாய் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு இருந்து, இணைப்பு விமானங்கள் மூலமாக, மொரிஷியஸ் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயண நேரம் பல மணி நேரம் அதிகரிப்பதோடு, விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகமாகியது.
இதை அடுத்து மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சென்னை- மொரிஷியஸ்- சென்னை இடையிலான, நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து வலியுறுத்தி வந்தனர். இதை அடுத்து பெரும்பாலான பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே விமானச் சேவையை நடத்தி வந்த, ஏர் மொரிஷியஸ் விமான நிறுவனம், மீண்டும் விமானச் சேவையைத் தொடங்க முன் வந்தது.
அதோடு முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விமானச் சேவையை நடத்துவது என்றும், அதன் பின்பு பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, விமானச் சேவையை மேலும் அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இயக்கப்படும், இந்த வாராந்திர முதல் பயணிகள் விமானம் இன்று அதிகாலை முதல் இயக்கப்பட்டது.
மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் விமான நிலையத்திலிருந்து, 245 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் மொரிஷியஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 1.50 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இயங்கத் தொடங்கிய, ஏர் மொரிஷியஸ் விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின்பு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் மொரிஷியஸ் பயணிகள் விமானம், மீண்டும் இன்று அதிகாலை 3.35 மணிக்கு, மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தின் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள். மேலும், கட்டணம் ரூபாய் 26 ஆயிரத்து 406 என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தோசை, இட்லி இருக்கட்டும் தமிழைப் பிடிக்குமா? தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? - ராகுல் காந்தி சரமாரி கேள்வி - Lok Sabha Election 2024