சென்னை:நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், குப்பை மேலாண்மை கையாளகக்கூடிய ஜிக்மா என்ற நிறுவனம் உள்ளிட்ட 8 ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதில், சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அபிராமிபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு என்பவரது வீடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் என்பவரது வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் சத்தியம் கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தில் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரது வீடு என பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மூன்று நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஐந்து கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்து கொள்வதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா என்ற கோணத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பணமும், தங்க நகைகளும் தேர்தலுக்காக பயன்படுத்த வைத்து இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "திமுக ஆட்சியிலும் பல துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளது" - எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024