தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்! - Tiruvallur car accident

Tiruvallur car accident: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ராமஞ்சேரி பகுதியில் கார் - கண்டெய்னர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் சென்னை தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் புகைப்படம்
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 10:53 AM IST

Updated : Aug 12, 2024, 11:09 AM IST

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சைதன்யா ( வயது 21) விஷ்ணு ( வயது 21), வர்மா, ராம்கோமன், சேத்தன், யுகேஷ், நித்திஷ் ஆகியோர் சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பயின்று வந்தனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் 5 பேரும் வாடகை காரில் சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் விநாயகர் கோவில் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ராமஞ்சேரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது கார் மீது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கனரக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மாணவர்கள் சென்ற கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சேத்தன், யுகேஷ், நித்திஷ், வர்மா, ராம்கோமன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சைதன்யா, விஷ்ணு ஆகிய இருவரும் திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் விபத்து நடந்த பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு வாகனத்தில் சிக்கிய இளைஞர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

விபத்து தொடர்பாக போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் வந்த உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் வேதனையுடன் அழுத காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க: என் பையில் பாம் இருக்கா?.. பயணியின் கேள்வியால் அதிர்ந்த அதிகாரிகள்.. அடுத்து நடந்த டிவிஸ்ட்..!

Last Updated : Aug 12, 2024, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details