திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்ற தீபக் பாண்டியன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள ஹோட்டல் முன்பு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
முகத்தை குறி வைத்து சிதைத்த கும்பல்: குறிப்பாக அக்கும்பல் தீபக் ராஜாவின் முகத்தை மட்டும் குறி வைத்து மிக கொடூரமாக வெட்டியதில் அவரது முகம் சிதைந்தது. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் முன்பிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் மர்ம கும்பல் சில அடி தூரத்தில் இருந்து தீபக் ராஜாவை ஓட ஓட விரட்டி வெட்டியது தெரியவந்தது.
கொலை வழக்குகளில் தொடர்பு: இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா மீது சில கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலையில் தீபக் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக நெல்லை தாழையூத்து கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் தீபக் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர இன்னும் சில கொலை வழக்குகளும் தீபக் ராஜா மீது இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக மக்களுக்கு குரல்: மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராகவும் தீபக் ராஜா இருந்துள்ளார் அதேபோல, தனது சமூக மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குரல் கொடுக்கும் நபராக இருப்பதுடன் பொது இடங்களில் சாதி ரீதியாக ஆக்ரோஷமாக தீபக் ராஜா பேசுவது போன்ற வீடியோக்களும் வெளியானது.
குறிப்பாக மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீபக் ராஜா பேசும்போது, ''அடிக்கு அடி தான் தீர்வு' உங்களுடன் மோத நாங்கள் இருக்கிறோம். அப்பாவி மக்களை எதற்கு தொந்தரவு செய்கிறீர்கள்'' என்று ஆவேசமாக பேசியிருந்தார். மேலும், தனது சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் யாராவது இறந்தால் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறுவது, அவர்களுக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு சமூகத்தின் தலைவராகவே தீபக் ராஜா செயல்பட்டு வந்துள்ளார்.