சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே மேலும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவையைக் குஜராத்திலிருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனை சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று கொடி அசைத்து வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "இன்று ரயில்வே துறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக இது உள்ளது. ரயில்வேத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. சென்னையிலிருந்து கோயம்புத்தூர், திருநெல்வேலி, மைசூர், விஜயவாடா ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரிலிருந்து மதுரைக்கு அடுத்து வந்தே பாரத் ரயில் வர இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் மட்டும் 6,000 கோடி ரூபாய்க்கு ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று 168 ரயில் நிலையங்களில் 150 திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் லட்சியம் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது. புல்லட் ரயிலுக்கான வேலைகள் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய நிகழ்ச்சியில் சென்னை எண்ணூர் - மதுரவாயல் சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.