சென்னை:தீபத் திருநாளான தீபாவளியை புத்தாடைகள், தீபங்கள், பலகாரத்துடன் வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், தீபாவளியின் முக்கிய கொண்டாட்டமான பட்டாசு வெடிப்பதென்றால் யாருக்குதான் பிடிக்காது. வாழ்நாளில் ஒரு முறையாவது விரும்பி பட்டாசுகளை வெடித்து தீபாவளியை அனைவரும் கொண்டாடியிருப்போம்.
சென்னையைப் பொறுத்தவரையில், ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படும். இந்த ஆண்டு பட்டாசு வியாபாரம் விற்பனை செய்வதற்காக விடப்பட்ட டெண்டர் வெளிப்படையாக இல்லை எனக் கூறி, டெண்டரை நியாயமான முறையில் நடத்தக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கில் நீதிமன்றம் தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைப்பதற்கான டெண்டரை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, பட்டாசு கடைகள் ஏ, பி, சி, டி என பிரிக்கப்பட்டு, அதற்கான விலையும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தீபாவளி பட்டாசை உங்க குழந்தைங்க பாதுகாப்பா வெடிப்பது எப்படி? சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் இதோ!
அதன்படி, ஏ பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 2,25,000 ரூபாயும், பி பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 4 லட்சம் ரூபாய், சி பிரிவில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், டி பிரிவில் கடைகளை 3 லட்சம் ரூபாயும் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னும் மூன்று நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டாசுக் கடைகளின் விற்பனை குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பட்டாசுக் கடை விற்பனையாளர் ஜாகீர் உசேன் கூறுகையில், “பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. எப்போதும் பட்டாசு விற்பனைக்காக தீபாவளிக்கு 2 வாரங்கள் முன்பாக எனக்கு கடையை ஒதுக்கி தருவார்கள். ஆனால், இந்த ஆண்டு 5 நாட்களே கொடுத்துள்ளனர்.
குறைந்த நாட்களே பட்டாசு விற்பனைக்கு இருப்பதால், கடந்த ஆண்டை விட அதிகமாக விற்பனை நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான். தீபாவளி பண்டிக்கைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை எப்போதும் விற்பனை அதிகமாக நடைபெறும் நிலையில், இந்த முறை ஞாயிற்றுக்கிழமையும் பெரிதாக கூட்டம் இல்லை” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்