சென்னை: சென்னை மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் பல கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி சதுப்பு நிலப்பகுதி உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் நீரின்றி சதுப்பு நிலம் வறண்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு திறந்தவெளி பரப்பில் உள்ள காய்ந்த கோரைப் புற்கள் திடீரென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
சிறிதாக பற்றிய தீ மளமளவென சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 20 அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. பின்னர், இது குறித்து உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தீ அதிக அளவில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் மேடவாக்கம், துரைப்பாக்கம், தாம்பரம், தாம்பரம் பயிற்சி மையம், அசோக் நகர், மதுரவாயல், வேளச்சேரி ஆகிய இடங்களில் இருந்து ஏழு வாகனத்தில் வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.