தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்! - chief minister stalin

Tamil Nadu Budget: தமிழ்நாடு அரசின் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.18) காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்டும் பட்ஜெட் என்பதால் நலத்திட்ட அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

finance Minister Thangam Thennarasu will present tomorrow TN Budget 2024
அமைச்சர் தங்கம் தென்னரசு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 4:10 PM IST

Updated : Feb 18, 2024, 4:34 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் முதல் பத்தியை மட்டுமே படித்து அமர்ந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டமே சலசலப்புடன் துவங்கியது. இதனையடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது 14ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை அளித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் நாளை (பிப்.19) காலை 10 மணிக்குக் கூடுகிறது. இதில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வருகின்ற மார்ச் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதற்குப்பின் மக்கள் நலம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ செயல்படுத்தவோ இயலாது. இந்த காரணத்தினால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிடத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதன்படி, இந்த ஆண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், வருகின்ற நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன் பின் பிப்ரவரி 22ஆம் தேதி விவாதத்திற்கு இரு அமைச்சர்களும் பதில் அளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கத்துக்கான சட்டம் முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

குறிப்பாகக் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தலை முன்னிறுத்தி இந்த ஆண்டும் புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யார் இந்த செல்வப்பெருந்தகை? - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உயர்ந்தது எப்படி?

Last Updated : Feb 18, 2024, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details