கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோயம்புத்தூர் வந்தார். நேற்றைய தினம் கொடிசியாவில் பல்வேறு தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில், இன்று வந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன்" என தெரிவித்தார்.
பின்னர் இன்று(செப் 12) சூலூர், ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிய போது, அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர் நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமிகண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.