திருநெல்வேலி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக அறியப்படும் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதனால், அவர் அந்த தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்தார். இறுதியாக, பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வந்துள்ளனர்.
இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதிக்கு வந்த நயினார் நாகேந்திரன், ஒலிபெருக்கியில் பேசாமல் மக்களை மட்டும் சந்தித்து சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்பதால், தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் மீது, தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் பாஜக உறுப்பினர் சதீஷ் உட்பட 3 பேரிடம் சுமார் நான்கு கோடி ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.