வேலூர்:வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.25,000 அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
கூட்டு பாலியல் வன்கொடுமை:வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் மற்றும் அவருடைய ஆண் நண்பர் ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ம் தேதி காட்பாடி பகுதியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது காட்பாடி பகுதியில் இருந்து செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை வந்த ஆட்டோ திடீரென இடது புறம் திரும்பி மருத்துவமனைக்கு செல்லாமல் பாலாற்றை நோக்கி சென்றது.
அந்த கும்பல் பெண் மருத்துவர், அவருடைய ஆண் நண்பர் இருவரையும் கத்திமுனையில் மிரட்டியது. ஆண் நண்பரின் கழுத்தில் கத்தியை வைத்து பெண் மருத்துவரை ஐந்து பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ 40,000் மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றையும் பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் ஆன்லைன் மூலமாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.