கோயம்புத்தூர்:பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலிசார் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் இருவரை கடந்த மே மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவரின் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் போலீசார் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் சைபர் கிரைம் போலீசாரின் குற்றப்பத்திரிகை நகல் நீதிபதி சரவணபாபு முன்பு வழங்கப்பட்டது. இதனிடையே, இருவரும் கேட்டு கொண்டதற்கு இணங்க இருவரையும் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பின்னர் இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சட்டத்திற்கு முரணாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள்.
அரசியலமைப்பை மீறி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யக்கூடாது எனபதை மீறி நடந்துள்ளது. இது ஒரு சாதாரண வழக்கு, 3 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் தண்டனை கிடையாது.