கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அதற்காக, சூளகிரி அருகே நல்லகானகொத்தபள்ளி, கோனேரிப்பள்ளி, குண்டுகுறுக்கி, கொரகுறுக்கி, வரதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் இரண்டு போக பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. இதனை நம்பி நல்லகானகொத்தபள்ளி, குண்டுகுறுக்கி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விளை நிலங்களிலும் சிப்காட் அமைக்க அரசு முயன்று வருவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (பிப்.12) தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் சூளகிரி பகுதி விவசாயிகள் 200க்கும் அதிகமானோர் சூளகிரி ரவுண்டானா முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.