தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு நற்செய்தி.. நேரடி நெல் கொள்முதல் குறித்த புகார்களை இனி வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்! - PADDY PROCUREMENT COMPLAINTS

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை விவசாயிகள் இனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு, வாட்ஸ்அப் மூலம் (Whatsapp) தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Tamil Nadu Civil Supplies Corporation website)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 7:57 PM IST

சென்னை:அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை விவசாயிகள் இனி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணான 94452 57000-க்கு Whatsapp இல் மட்டும் அளிக்கலாம் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரின் அறிவுரையின்படி மாநிலம் முழுவதும் நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன் கருதி, 2, 600-க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 12, 800 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து சுமார் 60 ஆயிரம் மெ.டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டும் வருகிறது.

சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற காரணத்தினால், இதனை தடுக்கக நுகர்பொருள் வாணிபக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட வருகிறது.

சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய 18005993540 எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களைத் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர் அல்லது முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோரிணன் அலைபேசி எண்களும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார்களை தெரிவிக்கலாம்.

இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூடுதல் பதிவாளர் நிலையில் பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.

இதையும் படிங்க:விகடன் இணையதளம் முடக்கம்: "பாஜகவின் பாசிசத் தன்மைக்கு எடுத்துக்காட்டு" - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒவ்வொரு குழுவிலும் தரக்கட்டுப்பாடு அலுவலர் ஒருவரும் மற்றுமொரு கண்காணிப்பு அலுவலரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது, எழும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று உரிய விசாரணையினை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜனவரி 2025 முதல் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில், கரம்பக்குடி, விலாப்படி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, இலுப்பை விடுதி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் கையூட்டு பெறுவதாக வந்த புகார்களையடுத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக அல்லது பருவகால பணியாளர்களை பொறுத்தவரையில் எழும் புகார்களின் மீது உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் உடனுக்குடன் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். நிரந்தரப் பணியாளர்களை பொறுத்தவரையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி மேல்நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எனவே, மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை. புகார்கள் இருக்கும்பட்சத்தில் 18005993540 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணான 94452 57000-க்கு Whatsapp இல் மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொளியோ இருந்தால் அதனையும் பதிவிடலாம்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details