தஞ்சாவூர்: பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று (மார்ச் 10) விவசாயிகள் அனைவரும் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி நோக்கி விவசாயிகள் வருவதை போலீசார் தடுத்த நிலையில், அவர்கள் அனைவரும் ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயச் சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் 3 கட்டங்களுக்கும் மேலாக மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு சுமூகமான உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில். நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
அதில் ஒரு பகுதியாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில், தஞ்சை மாவட்ட தலைவரும், காவலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான என்.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் பாட்சா ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணி ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் இன்று நண்பகல் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேச மறுப்பதைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற காலம் கடத்துவதைக் கண்டித்தும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், போராட்டக் குழுவினரைத் தடுத்து நிறுத்தி, ரயில் தண்டவாளத்தில் இருந்து போராட்டக் குழுவினரை அப்புறப்படுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், மாநகரச் செயலாளர் அறிவு உள்பட பல விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தேமுதிக வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகள்.. செய்தித் தொடர்பாளர் யார்?