சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள் தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணை கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வழிந்தோடியது. மேலும் கடந்த ஜன.10 ஆம் தேதி வரை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து உபரி நீர் வெளியேற்றம் 100 நாட்களைக் கடந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே தற்பொழுது சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீர் தேக்கப்பட்டு உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 70 கன அடியாகவும், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 70 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல் மஞ்சளாறு அணை தேனி - திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி, அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 56 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து தேனி - திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 100 நாட்களுக்கு மேல் 56 அடியில் முழு கொள்ளளவு உடன் இருந்து வருகிறது. தற்பொழுது அணைக்கு நீர்வரத்து 80 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றும் 80 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் இருப்பு 449 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியகுளம் பகுதியில் உள்ள அணைகள் 100 நாட்களைக் கடந்தும், முழு கொள்ளளவு உடன் நீர் நிரம்பி வழிவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பழனியில் புதிய மின் இழுவை ரயிலைத் துவக்கி வைத்த அமைச்சர்; பக்தர்கள் மகிழ்ச்சி!